ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள தெங்குமராஹடா வனத்தின் நடுவே ஆதி கருவண்ணாராயர் பொம்மாதேவியார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பௌர்ணமி தினத்தன்று பொங்கல் வைத்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி, கோயில் வளாகத்திலேயே சமைத்து விருந்து பரிமாறுவது வழக்கம்.
அந்த வகையில், இக்கோயிலுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர். மேலும் ஒரே நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காட்டுக்குள் வந்து செல்வதால், வனத்தின் சூழல் மற்றும் வனவிலங்குகளின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோயிலுக்கு வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த முக்கிய சில நிபந்தனைகளை, அதாவது ஒழுங்குமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், இன்று (பிப்.23) முதல் ஞாயிற்றுக்கிழமை (பிப்.25) வரை தினந்தோறும் 100 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கருவண்ணராயர் கோயிலில் இன்று நடைபெறும் பூச்சாட்டு விழாவில் கலந்து கொள்வதற்குத் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டத்தில் இருந்தும், 150க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆடு, கோழி மற்றும் சமையலுக்குத் தேவையான பொருட்களுடன் வந்த பக்தர்கள், காராச்சிக்கொரை சோதனைச்சாவடியில் காத்திருந்தனர்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, அனுமதிக்கப்பட்ட 100 வாகனங்களை வனத்துறை மற்றும் போலீசாரின் சோதனைக்குப் பிறகு கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, வேன் மற்றும் டெம்போக்களில் மறைத்து வைத்திருந்த மதுபானங்களை வனத்துறையின் பறிமுதல் செய்தனர். மேலும், வெடி பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? எனவும் சோதனை செய்கின்றனர்.
விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாகனங்களில் பயணிக்கும் பக்தர்களிடம், குறிப்பிட்ட இடங்களில் கிடா பலியிட்டுச் சமையல் செய்து கொள்ள வேண்டும் எனவும், மாயாற்றில் தண்ணீர் எடுக்காமல் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் எடுக்க வேண்டும் எனவும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், போதைப் பொருட்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது எனவும், 3வது கடைசி நாளில் 5 மணிக்கு மேல் வாகனங்கள் காட்டுக்குள் இருக்கக் கூடாது எனவும், பல அறிவுரைகளை போலீசார் வழங்கியுள்ளனர்.
மேலும், பொங்கல் விழாவை முன்னிட்டு, காராச்சிக்கொரை சோதனைச் சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாகனங்கள் 100க்கும் மேல் வந்ததால், கோயில் நிர்வாகிகள் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என முறையிட்டனர். பின்னர் அதிகாலையிலேயே 100 வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டதால், அதன்பின்னர் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டனர்.
அதனால், வாகனங்களில் வந்த பக்தர்கள் உணவு எதுவுமின்றி பசியால் தவித்து வருவதாகவும், அரசே ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்தால் நாங்கள் அதில் கூட செல்கிறோம் எனவும், நேர்த்திக்கடன் செலுத்த வந்துள்ள பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்து அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதாகவும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாசி மக உற்சவம் 2024; கும்பகோணத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்!