திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த இருவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயம் செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். மணப்பெண்ணும், மணமகனும் பரஸ்பரமாக பேசிக் கொண்டிருந்ததால், திருமணத்துக்கான ஏற்பாட்டை இரு வீட்டாரும் மும்முரமாக செய்து வந்துள்ளனர்.
மேலும், நேற்று காலை இருவருக்கும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், அதற்கு முந்தைய நாளே இருவீட்டாரும் மண்டபத்துக்கு வந்துள்ளனர். அதையடுத்து மணமகனும், மணமகளும் மிக மகிழ்ச்சியாக போட்டோ ஷூட்டும் நடத்தியுள்ளனர். விடிந்தால் திருமணம் என்ற நிலையில், திருமண மண்டபத்தில் மணப்பெண் செய்த செயலால் களையிழந்து போனது.
அதாவது, திருமண மண்டபத்தில் முகூர்த்த நேரம் நெருங்கிய போது, மணமகன் தாலி கட்ட வந்துள்ளார். ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வண்ணம், மணமகனை தடாலடியாக தள்ளிவிட்ட மணமகள், தாலியைப் பிடுங்கிவிட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால், திருமண நிகழ்வில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காரணத்தைக் கூறாமல், தனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று மணப்பெண் கூறியதால், திருமண மண்டபத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மணமகன் கண்ணீர் விட்டு அழுத நிலையில், இதுகுறித்து மணமகனின் உறவினர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர்.
ஆனால், இருதரப்பும் சமாதானம் பேசி முடித்ததால் வழக்குப் பதியவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மணமகனுடன் பேசி வந்த மணப்பெண் முன்னதாகவே கூறாமல், தாலி காட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய சம்பவம் திருமண மண்டபத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.