வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவரும், வேட்பாளருமான நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் வாக்குப்பதிவின் போது, குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் சித்தூர் கேட் உருது நடுநிலைப்பள்ளி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை இந்திய ஜனநாயகப் புலிகள் வேட்பாளர் மன்சூர் அலிகான் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டிருந்த முதல் இயந்திரம் வெளிச்சத்தில் இருப்பதாகவும், இரண்டாவதாக வைக்கப்பட்ட இயந்திரம் இருட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குச்சாவடி மைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இரண்டாவதாக உள்ள இயந்திரத்தில் தான் எனது சின்னம் உள்ளது. எனவே, நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே இது போன்று இரண்டாவது இயந்திரம் இருட்டில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், என்னுடைய சின்னம் பலாப்பழம். ஆனால் கலாக்காய் அளவுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என்றார். முன்னதாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, “வாக்கு இயந்திரப் பெட்டி இருட்டில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை வெளிச்சத்தில் வைக்கும்படி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினேன். அதற்கு அவர்களோ, விவி பேடில் வெளிச்சம் பட்டால் வேலை செய்து என்கிறார்கள். அப்போது பழைய முறைப்படி வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்தலாமே, ஏன் இயந்திரம் மூலம் நடத்துகிறார்கள்?
மருத்துவர்கள் என்னை ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தினார்கள். அதனைப் பொருட்படுத்தாமல், நான் போட்டியிடும் வேலூர் தொகுதிக்கு வந்துள்ளேன். எனது கட்சி அனாதையாகி விடக்கூடாது என்பதற்காக, என் கையில் பொருத்தப்பட்டிருந்த டியூப்களை எல்லாம் எடுத்துவிட்டு வந்திருக்கிறேன். எனக்கு பூத் ஏஜெண்ட் யாரும் இல்லை. மக்கள் தான் எனக்கு ஏஜென்ட்.
500 ரூபாய் கொடுத்தால் ஓட்டு போடுகிற நிலைமைக்கு மக்களை வைத்திருக்கிறார்கள், அதுதான் அவர்களுடைய ராஜதந்திரம், அது மிகவும் வெட்கக்கேடானது. ஓட்டுக்கு காசு கொடுக்கக் கூடாது. ஆனால், ஓட்டுக்கு காசு கொடுத்து மக்களை அடிமையாக்கி, அவர்களுடைய வாழ்வாதாரம் உயராமல், அவர்களை பிச்சைக்காரர்களாக வைத்து வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
மக்களை தலை நிமிர்ந்து வாழ்வதற்கான வசதிகளை 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த யாரும் முன்னெடுக்கவில்லை. தற்போது நடந்து வருவது இந்திய ஜனநாயக திருவிழா அல்ல, நாடகத் திருவிழா. நூறு சதவித வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக கடற்கரை ஓரம் கோடிக் கணக்கில் பணம் செலவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதை எதற்காக செய்ய வேண்டும். இதனால் கோடி கணக்கில் பணம் தான் வீணாக செலவழிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக்கில் விளம்பரம் செய்கிறார்கள் பேனர்கள் வைக்கிறார்கள். பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக்கால் ஆனா விளம்பர பதாகைகள் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. என் மீது பல வாதங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் வாக்குகளை பிரிப்பதற்காக நான் பணம் வாங்கிக்கொண்டு தேர்தலில் நின்றதாக கூறுகின்றனர். தேர்தல் முடிவுகளில் தெரியவரும் நான் நேர்மையானவன் என்று” என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.