திருப்பத்தூர்: நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி ஆகியோர் பங்கேற்று, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இஸ்லாமியர்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த சிறப்புத் தொழுகையில் அரசியல் கட்சியினர் வந்ததால், ஆம்பூர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், "எனது வாழ்க்கையில் இந்த ஆம்பூர் பாங்கிஷாப் ஈத்கா மைதானத்தில் தொழுகையில் ஈடுபட்டதை மிகவும் உன்னதமான அனுபவமாக கருதுகிறேன். இது எனக்கு கிடைத்த பாக்கியம். இவ்வளவு எளிமையாக, அமைதியான இஸ்லாமிய மக்களை தொடர்ந்து ஆளும் வர்க்கத்தினர் வஞ்சித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்து சமுதாய மக்களும் மிக மிக ஈடுபாட்டுடன் என்னை ஆரத்தழுவி, அன்பாக நேசிக்கின்றனர். அதனால் தான் நான் ஆரணியை விட்டு இங்கே வந்து போட்டியிடுகிறேன்.
சாதி, மதம் இல்லையடி பாப்பா என்று மத வேறுபாடு பார்க்கக்கூடாது தான், ஆனால் வாக்கு வங்கி என்று பயன்படுத்தி தான் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துகின்றனர், வெற்றி பெறுகின்றனர். அந்த வகையில், இங்கு ஆம்பூர், பேர்ணாம்பட், உமராபாத், வாணியம்பாடி, வேலூர் ஆகிய பகுதிகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். அதன் அடிப்படையில், 40 ஆண்டு காலமாக உருது பேசும் முஸ்லீம்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், திராவிடக் கட்சிகள், காங்கிரஸ் அனைத்தும் வஞ்சித்து விட்டன என்று தான் கூற வேண்டும்.
இது நூற்றுக்கு நூறு உண்மை. இதை நான் மன்சூர் அலிகானாக கூறவில்லை, ஒரு பார்வையாளனாகப் பதிவு செய்கிறேன். இவர்களது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக, இந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன். அதில் அதிகபட்ச உண்மையுள்ளது. அதற்காக தன்னந்தனியாக, ஒரு போராளியைப் போல எனது கை காசைப் போட்டு, கால்களில் கொப்புளம் வந்துள்ளது, கொளுத்தும் வெயிலில் தன்னந்தனியாக போராடுகிறேன்.
சில ஜமாத் அமைப்புகள், தோல் தொழிற்சாலை அதிபர்கள் வழக்கமாக திமுகவிற்கு ஆதரவு தருவார்கள், அதில் தவறு ஒன்றும் இல்லை. ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாய மக்களுக்கும் அவர்கள் கான்ட்ராக்ட்காரர்கள் இல்லை. ஆகவே கீழ்மட்டத்திலிருந்து, ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் என்னை ஆதரிக்கிறார்கள். அனைத்து மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வது உறுதி" எனத் தெரிவித்தார்.
இதேபோல, மயிலாடுதுறை அருகே பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில், இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், ராஜகுமார் மற்றும் ஆதரவாளர்களுடன் பள்ளிவாசல்களுக்கு வந்த இஸ்லாமியர்களை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்தும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் ஆதரவு திரட்டினர்.
மேலும், தேனியில் நடந்த சிறப்புத் தொழுகை முடிந்து ஊர்வலமாக வந்த இஸ்லாமியர்களிடம், தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், திமுக நிர்வாகிகள் ஆகியோர் ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளர் ச.பசுபதி இஸ்லாமியர்களோடு இணைந்து தொழுகை செய்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.