திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது மாஞ்சோலை வனப்பகுதி. சாதாரண சுற்றுலாத் தளமாக இருந்த மாஞ்சோலை, சமீபமாக அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் இடமாக பேசப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் தான்.
மாஞ்சோலையின் வரலாறு: மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் கடந்த 1929ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் எனப்படும் பிபிடிசி (BBTC) என்ற தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதாவது, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சிக்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டிலிருந்த இந்த மாஞ்சோலை வனப்பகுதியில், தேயிலை எஸ்டேட் அமைக்கத் திட்டமிட்ட பிபிடிசி நிறுவனம், அதற்காக சிங்கம்பட்டி ஜமீனை அணுகியது.
அதைத் தொடர்ந்து, கடந்த 1929ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. சுமார் 8,000 ஏக்கர் பரப்பளவில் கரடுமுரடாக இருந்த மாஞ்சோலை மலைப்பகுதியைச் சீராக்கி, அங்கு தேயிலை பயிர்களை பயிரிட்டது பிபிடிசி நிறுவனம். மாஞ்சோலை மட்டுமில்லாமல் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரவெட்டி ஆகிய 5 இடங்களிலும் தேயிலை எஸ்டேட் அமைத்தது.
இங்கு வேலை செய்ய கேரளா, நெல்லை, மானூர், தூத்துக்குடி போன்ற இடங்களிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு அங்கேயே குடியிருப்பு வசதியையும் பிபிடிசி நிர்வாகம் அமைத்துக் கொடுத்தது. இந்த எஸ்டேட் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான மலைப்பகுதியாகவும், பனிப்பொழியும் இயற்கை சூழலுக்கு நடுவே அமைந்துள்ளதால், மாஞ்சோலையை விட்டுப் பிரிய மனமில்லாத தொழிலாளர்கள் தங்கள் சந்ததியினரையும் இங்கேயே வேலைக்கு அமர்த்தினர்.
குறைவான சம்பளம் என்றாலும் சுகாதாரமான சூழ்நிலை என்பதால் மனநிறைவோடு, சுமார் 5 தலைமுறைகளாக தொழிலாளர்கள் மாஞ்சோலையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தேயிலைத் தோட்ட வளர்ச்சியின் பின்னணியில் தொழிலாளர்களின் ரத்தமும், சதையும் புதைந்து கிடைக்கிறது. ஆரம்பத்தில் 3000க்கு மேற்பட்டோர் பணிபுரிந்த நிலையில் தற்போது 536 பேர் மட்டுமே பணி புரிகின்றனர்.
தாமிரபரணி படுகொலை: மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் என்றாலே, அனைவருக்கும் தாமிரபரணி படுகொலை (Manjolai Labourers Massacre) தான் நினைவுக்கும் வரும். அதாவது, 1999ஆம் ஆண்டு ஜூலை 23 இதே நாள், ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய மாஞ்சோலை தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அந்த தாக்குதலுக்குப் பயந்து அங்கும் இங்குமாக சிதறியோடிய போது, தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 வயதுக் குழந்தை உட்பட 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
1999 ஜூலை 23ஆம் தேதி மாஞ்சோலையில் நடந்தது என்ன?: மாஞ்சோலை எஸ்டேட் துவங்கிய காலத்திலிருந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வந்த மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி 1990 காலகட்டங்களில் இருந்தே குரல் கொடுக்கத் துவங்கினார். மேலும், இதுதொடர்பாக, அவர் மாஞ்சோலை தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, தொழிலாளர்களுக்கான உரிய ஊதியத்தை வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட பிபிடிசி மற்றும் அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் செல்ல கிருஷ்ணசாமி திட்டமிட்டார். அதன்படி, 1999ஆம் ஆண்டு 23ஆம் தேதி மாஞ்சோலை தொழிலாளர்கள் அனைவரும் நெல்லைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லை சந்திப்பிலிருந்து கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் வழியாக மாவட்ட ஆட்சியரை சந்திக்கச் சென்றபோது, ஆற்றுப்பாலத்தில் அருகில் காத்திருந்த போலீசார், திடீரென தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தினர்.
17 பேரின் உயிரைப் பறித்த தாக்குதல்: கண்ணிமைக்கும் நேரத்தில் போலீசார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், செய்வதறியாது தவித்த தொழிலாளர்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடத் துவங்கியுள்ளனர். மேலும், அவர்களை அழைத்து வந்த கிருஷ்ணசாமியும் நடப்பதை அறிந்து கொள்ள முடியாமல் திகைத்து, தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.
ஆனால், போலீசார் தொழிலாளர்களை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த தாக்குதலுக்குப் பயந்து பலர் ஆற்றுப்பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் இறங்கி தப்பியோடியுள்ளனர். ஆனால், ஆற்று இறங்கிய சிலருக்கு சரிவர நீச்சல் தெரியாத காரணத்தால், விக்னேஷ் என்ற 2 வயது குழந்தை உட்பட 17 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த அவலம் நிகழ்ந்தது.
மாஞ்சோலை படுகொலை நினைவு தினம்: தாமிரபரணி ஆற்றில் சகதொழிலாளர்கள் தங்கள் கண்முன்னே உயிரிழந்ததைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். தற்போது, போலீசாரின் தடியடியிலிருந்து தப்பிக்க ஆற்றில் இறங்கி பரிதாபமாக உயிரிழந்த 17 பேரையும் நினைவு கொள்ளும் விதமாக, ஆண்டுதோறும் ஜூலை 23ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தொழிலாளர்களின் நினைவு தினம் என அனுசரிக்கப்படுகிறது.
முடிவுக்கு வரும் 95 ஆண்டு கால சகாப்தம்: ஜமீனுடன் பிபிடிசி நிறுவனம் போட்டுக்கொண்ட குத்தகை காலம் 2028ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. நாடு சுதந்திரத்துக்குப் பின், ஜமீன் நில ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டதால், அனைத்து ஜமீன் நிலங்களையும் அரசு கையகப்படுத்தியது. அந்த வகையில், மாஞ்சோலை பகுதியும் அரசு வசம் செல்லும் சூழல் உருவானது. ஆகையால், பிபிடிசி நிறுவனம் நீதிமன்றத்தை நாடினர்.
இதையடுத்து குத்தகை காலம் முடியும் வரை பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டத்தை நடத்தவும், 2028ல் முறைப்படி அரசு நிலத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் மாஞ்சோலை உள்ளதால் அதைக் காப்புக்காடாக அறிவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது நாட்கள் கிடுகிடுவென ஓடிய நிலையில், குத்தகை காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகளே உள்ளது. இந்நிலையில், முன்கூட்டியே எஸ்டேட் தொழிலாளர்களை வெளியேற்ற பிபிடிசி நிர்வாகம் முடிவு செய்து கடந்த சில மாதங்களாகவே இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதில் ஒருபகுதியாக, தொழிலாளர்களிடம் கட்டாய விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. முதலில், ஓய்வு பெற விரும்பவில்லை என தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், சுமார் 100 ஆண்டுகளாக வாழ்ந்த மண்ணை விட்டுப் பிரிய மனமில்லை என்றாலும், நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு கண்ணீரோடு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்: தமிழ்நாடு அரசு இந்த எஸ்டேட்டை ஏற்று நடத்தினால் தொடர்ந்து இங்கு வாழலாம் என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், மாஞ்சோலையை காப்புக்காடாக (Reserve Forest) நீதிமன்றம் அறிவித்ததால், தமிழக அரசு நேரடியாக எஸ்டேட்டை ஏற்று நடத்துவதில் சட்ட சிக்கல் உள்ளது. எனவே தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான பணபலங்கள் உட்பட அனைத்து தேவைகளையும் வழங்கி அவர்களை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிபிடிசி நிர்வாகம் செய்து வருகிறது.
இருந்தாலும், மாஞ்சோலையை விட்டுச் செல்ல மனமில்லை என்றும், இங்கேயே வாழ அரசு வழி வகை செய்ய வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்தி கொடுக்கும் வரை அவர்களை வெளியேற்றக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இது சாதகமான தீர்ப்பு என்றாலும், தொழிலாளர்களுக்கு நிரந்தர தீர்வு இல்லை.
விருப்ப ஓய்வு வழங்கி விட்டதால், கடந்த 20 நாட்களுக்கு மேலாக வேலை வழங்குவதையும் நிர்வாகம் நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், வேலையும் இல்லை, வருமானமும் இல்லை எனத் தொழிலாளர்கள் வறுமையில் விழி தவிக்கின்றனர். அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பது கூடத்தெரியாமல் விழி பிதுங்கியுள்ள இந்த நிலையில் தான், 17 பேர் உயிர்நீத்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
பயனளிக்காத போராட்டம்.. அன்று கூலிக்காக இன்று வேலைக்காக: உயிரைக் கொடுத்து போராடியும் தற்போது எந்த பலனும் இல்லையே என தொழிலாளர்கள் எண்ணுகின்றனர். இதுகுறித்து மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை சேர்ந்தவரும், வழக்கறிஞருமான அரசு அமல்ராஜ் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "மாஞ்சோலை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு வேறு எந்த வேலையும் தெரியாது.
சுமார் 30 நாட்களாக வேலையின்றி, சோதனையான காலகட்டத்தில் தவிக்கின்றனர். இந்த நிலையில், சோதனையிலும் சோதனையாக ஜூலை 23 மாஞ்சோலை தொழிலாளர்கள் உயிர் நீத்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 1999 ஜூலை 23 கூலி உயர்வு கேட்டுப் போராடிய தொழிலாளர்களை போலீசார் தாக்கியதால் 17 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக சட்ட உதவிகளை செய்தேன். தற்போது வரை மாஞ்சோலை மக்களுக்காக போராடி வருகிறோம். ஆனால், 17 பேர் உயிரைத் துறந்து போராட்டம் நடத்தியும் மாஞ்சோலை மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே மாஞ்சோலை மக்களுக்கு நீதி வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்