வேலூர்: குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசன். இவருக்கு பாரதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகக் கவியரசனுக்கும் அவர் உடன் பிறந்த சகோதரரான கார்த்தி என்பவருக்கும் இடையே சொத்துப் பிரச்சனை இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று(சனிக்கிழமை) கவியரசன் வீட்டில் ஆள் இல்லாத போது, அவருடைய அண்ணன் கார்த்தி வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், கவியரசனிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கவியரசன், கார்த்திகேயனிடம் சென்று என்ன நடந்தது எனக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனை பார்த்த கவியரசன் மனைவி, அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கவியரசன் முதுகில் சரமாரியாக குத்தியுள்ளார் கார்த்தி. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர்.
அங்கு கவியரசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குடியாத்தம் கிராமிய போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தம்பியைக் கத்தியால் குத்தி கொன்ற கார்த்திகேயனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நண்பர்களுடன் சூப் சாப்பிட சென்ற நபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்.. திருவாரூர் அருகே நிகழ்ந்த சோகம்!