தஞ்சாவூர்: சேதுபாவாசத்திரம் காவல் சரகம், மல்லிப்பட்டினம் கிராமத்தில் கடந்த மார்ச் 7ஆம் தேதி, 9 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காரில் வந்து, கடத்த முயற்சித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
இதனால், தஞ்சாவூர் சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பேராவூரணி காவல் நிலைய பெண் ஆய்வாளர் மற்றும் மாவட்ட குழந்தைகளுக்கான உதவிக்கரங்கள் கண்காணிப்பாளர் அஜிதா மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் நேரடியாக சென்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமி முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், இதுகுறித்து அப்பகுதியில் இருந்த பெட்டிக்கடை உரிமையாளர் மற்றும் அருகில் குடியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். இதில், குறிப்பிட்ட இடத்தில் கார் எதுவும் நின்றதாக தெரியவில்லை என்றும் இங்கு குழந்தை கடத்தல் போன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குழந்தை கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவேற்றம் செய்த மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் (38) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “நேற்று முன்தினம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த 9 வயது சிறுமி அவரது பாட்டி வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது, பெட்டிக்கடை அருகில் நின்று கொண்டிருந்த காரிலிருந்து ஒருவர், சிறுமியை காரில் ஏறும்படி வற்புறுத்தினார். இதனால், சிறுமி பயந்து சென்றுவிட்டாள். மேற்படி விவரத்தை சிறுமி தெரிவிக்காத நிலையில், சிறுமி கடத்தல் என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் நேரடி வீடியோவாக பதிவேற்றம் செய்தேன்” என ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.
இதனால், வதந்தியை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதற்காக, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். மேலும், பொதுமக்களிடையே வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல்: ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி உறுதி!