தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பகுதியில் உள்ள நாவிலக்கம்பட்டி சாலையில் சிலர் பொது வழியில் இரு சக்கர வாகனத்தின் மீது அமர்ந்து மது அருந்தி கொண்டிருப்பதாக எட்டையபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரைக் கண்டதும் அங்கு மது அருந்திக்கொண்டிருந்த சிலர் ஓடியதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்த இரு சக்கர வாகனங்களை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல முயன்ற போது, அங்கு நின்றிருந்த ஒருவர் எப்படி இரு சக்கர வாகனத்தை எடுத்து செல்லலாம்? குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டவில்லை? வாகனத்தில் அமர்ந்து தான் இருந்தோம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார்.
மேலும், சலூன் கடைக்கு வந்தவரின் இருசக்கர வாகனத்தை போலீசார் எடுத்து செல்வதாகவும், பாரதியார் பிறந்த மண்ணான எட்டையபுரத்தில் காவல்துறையினர் இப்படி நடந்து கொள்வதாகவும் வீடியோவில் பேசி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், எட்டையபுரம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அந்த வீடியோவை பதிவேற்றம் செய்தது சென்னையில் காய்கறி கடை வைத்திருக்கும் பொன்ராஜ் என்பது தெரியவந்தது. எட்டையபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சாலையில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பொன்ராஜ் மற்றும் அவரது உறவினர் அருண் என்ற ராஜா என்பவரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தாங்கள் செய்தது தவறு தான். இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
அதுமட்டுமின்றி இருவரும் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் மது அருந்துவிட்டு தவறாக நடந்து கொண்டோம். தற்போது சமாதானமாக செல்வதாக தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா? கருணாநிதி பாணியில் பதிலளித்த ஸ்டாலின்! - Deputy CM Controversy