சென்னை: இந்தியாவில் உள்ள வேலையின்மை பிரச்னையை சரிசெய்யும் விதமாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாக பாஜக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. மேலும், நாடு முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தது.
அதன்படி, 'ரோஜ்கர் மேளா' என்ற பெயரில், மத்திய அரசு தரப்பில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று (பிப்.12) நாடு முழுவதும் உள்ள 47 இடங்களில் ரோஜ்கர் மேளா நடைபெற்றன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் விழாவில், மத்திய அரசின் வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர் கல்வித்துறை, அணுசக்தித் துறை, பாதுகாப்புத் துறை, நிதிச் சேவைத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பழங்குடியினர் நல அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் உள்ளிட்டவற்றில் இருக்கும் பல்வேறு பதவிகளுக்கு, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஐஐடி மெட்ராஸ் சான்சிபாரில் பிஎஸ், எம்டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை.. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு..!
அவ்வாறு சேரவுள்ள அந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். அந்த வகையில், ஆவடி சிஆர்பிஎப் (CRPF) வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு, பணி ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி ஆணைகளை பெற்றுக் கொண்டனர். குறிப்பாக, இந்த பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், சிஆர்பிஎப் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பு பல்வேறு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூட பாஜக 400 இடங்களுடன் தேர்தலில் வெற்றி பெரும் என்று தெரிவித்துள்ளார்" என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாநிலங்களவையில் சோனியா.. மக்களவையில் பிரியங்கா.. காங்கிரஸின் கணக்கு என்ன?