வேலூர்: தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது வரை இதில் சுமார் 2 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெற்றுள்ளதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் நறுவி மருத்துவமனை மற்றும் தி-இந்து குழுமம் சார்பில் மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில், "ஹெல்தி இந்தியா, ஹேப்பி இந்தியா" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை நறுவி மருத்துவமனையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மக்களின் ஆரோக்கியத்தில் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சியாக, வேலூர் நறுவி மருத்துவமனை சார்பில் "ஹெல்தி இந்தியா, ஹேப்பி இந்தியா" (Healthy India Happy India) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய உடல் நலனுக்காக நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதைத்தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, "வருமுன் காப்போம்" என்ற திட்டத்தை கொண்டு வந்த நடைமுறைப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: "ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.944 கோடி கொடுத்ததே மிகப்பெரிய விஷயம் ஆச்சே" - உதயநிதி
உலக அளவில் தமிழக அரசு சுகாதார துறையில் மிகப்பெரிய சாதனையை செய்து வருகிறது. மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 உள்ளிட்ட பல்வேறு முன்னோடி மருத்துவத்துறை சார்ந்த திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சும்மா 2 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
நலமான வாழ்வுக்கும் , உடல் நலனை பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் @the_hindu மற்றும் நறுவீ மருத்துவமனை சார்பிலான 'Healthy India - Happy India' என்கிற சிறப்புக்குரிய முன்னெடுப்பை வேலூரில் இன்று தொடங்கி வைத்தோம்.
— Udhay (@Udhaystalin) December 7, 2024
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம்… pic.twitter.com/TdSPQkALPU
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நீர்ப்பாசனம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.