திருச்சி: பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், கோவை சிறையில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என அவர் கூறியதை அடுத்து, அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
முன்னதாக, முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் லதா திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அரசுத் தரப்பில், காவல்துறை விசாரணைக்காக அவர் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முல்லை சுரேஷ், இந்த வழக்கில் கைது செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சவுக்கு சங்கரை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். அதன் பின்னர், சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லை சுரேஷ், "மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக ஏற்கனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கிற்கு கடந்த ஜூன் 4ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் பதிந்த வழக்கில் இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. எங்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தோம். ஒரு வழக்கில் ஆதாரம் இருந்தால் அதற்காக கைது செய்யலாம். ஒரு குற்றத்திற்காக பல வழக்குகள் போடக்கூடாது. ஒரு வழக்கில் ஒரு புகார்தாரர் புகார் கொடுத்த பின்பு, வேறு புகார் அந்த வழக்கு தொடர்பாக வந்தால் அந்த புகார்தாரர் சாட்சியாகத்தான் சேர்க்க வேண்டும். புதிய வழக்கு பதிவு செய்யக்கூடாது என இருந்த வழக்கை உதாரணமாக எடுத்து வாதிட்டோம்.
நீதிபதி கேட்டு அறிந்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்தார். மேலும், சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக உத்தரவு பிறப்பித்தார். எனவே, இனி விசாரணைக்கு ஆஜரானால் மட்டும் போதும். அந்த வகையில், திருச்சியில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை சிறையில் இருக்கும்போது அவருக்கு கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு, சென்னை புழல் சிறையில் எந்தவித மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படவில்லை. கோவை சிறையிலிருந்து எந்த மருத்துவச் சான்றிதழும் வரவில்லை என மறுத்துவிட்டனர். இது குறித்து நீதிபதியிடம் முறையிட்ட போது, பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; கேசவ விநாயகத்திடம் அனுமதியின்றி விசாரணை நடத்த தடை!