சென்னை: சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாணவர்களிடம் பேசிய மகாவிஷ்ணு விவகாரம் பேசும்பொருளாக மாறியது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான அறிக்கை தயார் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் இயக்குனர் கண்ணப்பன் வழங்கிய நிலையில், இது தொடர்பாக முதல்வரின் தனிச் செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து இனிவரும் காலங்களில் பள்ளிகளில் இது போன்று நடக்காமல் இருப்பதற்காக புதிய வழி முறைகள் வகுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ், தஞ்சாவூர் சரபோஜி நூலகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மகாவிஷ்ணுக்கு செப்.20 வரை நீதிமன்றக் காவல்! - சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு!
மேலும் சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஏஞ்சலோ இருதயசாமியிடம், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதவி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் தொடர்பாக 3 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.