கோயம்புத்தூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் இன்று (23-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெரும்பாண்மைக்கு தேவையான இடங்களை தாண்டி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இந்தியாவின் தொழில்துறையில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.
சத்ரபதி சிவாஜி மகராஜ், டாக்டர் அம்பேத்கர், பாலகங்காதர திலகர், ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவார் உள்ளிட்ட தேசத்திற்கு வழிகாட்டி பல்வேறு தலைவர்கள் பிறந்த மண்ணில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி பெருமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது.
இதையும் படிங்க: "கட்சிகளை உடைத்து.. புதிய கூட்டணிகளை உருவாக்கி... மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி குறித்து திமுக கருத்து!
இந்த வெற்றியின் மூலம், கடந்த பத்தரை ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், இடையில் மூன்றாண்டுகள் தவிர 2014 முதல் அங்கு இருந்த பாஜக மற்றும் பாஜக கூட்டணி அரசுக்கும் மகாராஷ்டிர மக்கள் நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர். சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளை மொத்த அறுவடை செய்வதற்காக, தேசத்தையே விட்டுக் கொடுத்து பிரிவினை சக்திகளுடன் கை கோர்த்த காங்கிரஸ் தலைமையிலான 'இண்டி' கூட்டணிக்கு மகாராஷ்டிர மக்கள் தக்க பாடம் கற்பித்துள்ளனர்.
மாநிலங்களின் வளர்ச்சி, உரிமைக்கு முன்னுரிமை கொடுத்து, தேசத்தின் நலனை முன்னிறுத்திய பாஜக கூட்டணிக்கு மொத்தமுள்ள 288 இடங்களில் 227க்கும் அதிகமான இடங்களில் மகாராஷ்டிர மக்கள் வெற்றியை பரிசாக வழங்கியுள்ளனர். 141 இடங்களில் போட்டியிட்ட பாஜக 131 இடங்களில் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன.
இதை நேரடியாக உணர்ந்த மகாராஷ்டிர மக்கள் மீண்டும் பாஜகவை அரியணையில் அமர்த்தியுள்ளனர். இந்த வரலாற்று வெற்றிக்கு காரணமான மகாராஷ்டிர மக்கள், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கும், கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றி பாராட்டுகள்" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்