மதுரை: தீபாவளி பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க தெற்கு ரயில்வே பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், தற்போது மதுரையிலிருந்து சென்னைக்கு முதல் முறையாக மெமு ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மதுரை - சென்னை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் - கழிப்பறை வசதியுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையை ஒத்தது) ரயில் சேவை, நாளை (நவம்பர் 3) இரவு இயக்கப்பட இருக்கிறது.
இந்த மதுரை - தாம்பரம் முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06100), மதுரையில் இருந்து நாளை இரவு 07.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். முன்னதாக, இந்த ரயில் சேவை (06099) சென்னையில் இருந்து நாளை (நவம்பர் 3) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, மாலை 06.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்கள் சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயணக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தென்மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மதுரையில் இருந்து மெமு ரயில் சேவை.. எப்போது துவக்கம்?
மேலும், மதுரையை மையமாகக் கொண்டு தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மெமு ரயில் சேவை துவங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அண்மையில், அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து என்ற தேசிய நுகர்வோர் நல அமைப்பின் சார்பாக, மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணாவிடம் மெமு ரயில் சேவையை துவக்க வேண்டும் என டெல்லிக்கு நேரடியாக சென்று வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தச் செய்தியை முதன் முதலாக ஈடிவி பாரத் ஊடகம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இயக்கப்பட்டு மெமு ரயில் சேவை குறித்து அந்த அமைப்பின் ஆலோசகரும், ரயில் ஆர்வலருமான அருண்பாண்டியன் ஈடிவி பாரத்திடம் தொலைபேசி வாயிலாக கூறுகையில், “இது மதுரையில் முதல் மெமு ரயில் என்பதில் நமக்கு பெருமை. இந்த தொடக்கம் அடுத்த கட்டமாக தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் விரிவுபடுத்த வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறேன்” என்றார்.