மதுரை: மலேசியா சிலம்ப கழகம் மற்றும் இன்டர்நேஷனல் சிலம்பம் பெடரேஷன்(international silambam federation) இணைந்து மலேசியாவில் மே 25 முதல் 27 வரை நடத்திய சிலம்பம் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில், 13 முதல் 16 வயது வரையிலான ஆண்கள் பிரிவில் மதுரையைச் சேர்ந்த அதீஸ்ராம் ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலமும் வென்று தமிழ்நாட்டிற்கும், மதுரை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சிலம்பம் போட்டியில் வென்று சாதனைப் படைத்த சிறுவன் அதீஸ்ராம் கூறுகையில், “ நான் மதுரையில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறேன். கடந்த மே 23 ஆம் தேதி மலேசியா அரசின் சார்பாக நடைபெற்ற போட்டியில், நெடுங்கம்பத்தில் 2ஆம் பரிசும், நடுகம்பத்தில் 3ஆம் பரிசம் பெற்றுள்ளேன். 13 லிருந்து 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 25 பேரில் நானும் ஒருவன்.
இந்த போட்டியில், இந்தியா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், அயர்லாந்து, யூஏஇ, கத்தார் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. எனக்கு இது புது விதமான அனுபவம். இதுவரை நடைபெற்ற சர்வதேச போட்டிகளில், விளையாடிய அனைவருக்கும் பரிசு அளிப்பார்கள். ஆனால், இந்த முறை 1, 2, 3 மற்றும் 4ஆம் இடம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு பங்களிப்பு சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது” என்றார்.
அதீஸ்ராம் வெற்றிப்பெற்றது குறித்து சிலம்பம் மாஸ்டர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “ மாவட்டம், மாநிலம், சர்வேதம் என்று எத்தனையோ போட்டிகளில் கலந்து கொண்டுள்ளோம். ஆனால், இந்த போட்டி புதுமையான விதிமுறைகளோடு மிக வித்தியாசமாக நடைபெற்றது. அதீஸ்ராம் பங்கேற்கும் போட்டிகளில் பெரும்பாலும் முதல் பரிசினை பெறுவார்.
ஆனால், மலேசியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் கடுமையான விதிமுறைகளும், சட்டதிட்டங்களும் இருந்த காரணத்தால் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளார். இனிவரும் காலங்களில் அதற்கேற்றார் போல் பயிற்சி அளித்து அதீஸ்ராமை தயார் படுத்த வேண்டும். இந்த போட்டியை நடத்திய மலேசிய சிலம்ப கழகம் கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் மலேசிய அரசின் அங்கீகாரத்தோடு இயங்கி வருகிறது.
தமிழ்நாடு சிலம்பத்தின் பூர்வீக மாநிலமாக இருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் மத்திய, மாநில அரசுகள் இந்த விளையாட்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளன. சிலம்ப கலையை மென்மேலும் மத்திய, மாநில அரசுகள் வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மேலும் பல திறமையான மாணவர்கள் உருவாவார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து, அதீஸ்ராமின் தந்தை ஜெயராமன் கூறுகையில், “கடந்த 2019 ஆம் ஆண்டு மலேசியாவில் அந்தந்த வயதுக்கு உரியோருகாகு மட்டுமே நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் அதீஸ்ராம் தங்கப்பதக்கம் வென்றார். இந்த முறை 13 லிருந்து 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பல்வேறு நாடுகளில் இருந்து இவரது வயதை மீறிய மாணவர்கள் பங்கேற்றதும், புதிய பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டதனாலும் குழப்பம் ஏற்பட்டதால் இம்முறை இரண்டு மற்றும் மூன்றாம் பரிசை அவர் வென்றுள்ளார்.
அடுத்து 4 மாதங்களில் துபாயில் சர்வதேச சிலம்பப் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதில் அதீஸ்ராம் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வதற்கான முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற்கொள்வார். தமிழக அரசு, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் சிலம்ப மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அதற்கான வாய்ப்புகளையும், வழிமுறைகளையும் உருவாக்கித்தர வேண்டும்.
இந்த வழிமுறை தெரியாத பல்வேறு குழந்தைகள் அதீஸ்ராம் உட்பட தங்களது திறமையை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கின்றனர். அடுத்தடுத்து நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அதீஸ்ராம் தமிழருக்கும், தமிழர் பாரம்பரிய கலைக்கும் நிச்சயம் பெருமை சேர்ப்பார்” இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: நார்வே செஸ் போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா! - Praggnanandhaa