மதுரை: கடந்த ஜூன் 13ஆம் தேதி இந்திய ரயில்வே மண்டல ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. காணொளி காட்சி மூலமாக நடத்தப்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பொது மேலாளர்களுடன் "ரயில் மதாத்" செயலியில் அதிகரித்து வரும் புகார் குறித்து ஆலோசித்தார். ரயில் மதாத் செயலி என்பது ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் உரிய பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் பற்றி புகார்கள் அளிக்கும் செயலியாகும்.
இதனை தொடர்ந்து புகார்களை தவிர்க்கவும் வகையில் ரயில் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் மதுரை கோட்டத்தில் வைகை, குருவாயூர், பாலக்காடு செல்லும் ரயில்களுக்கும், பழனி முதல் சென்னை, தூத்துக்குடி முதல் மைசூர் செல்லும் ரயில்களில் கடந்த ஐந்து நாட்களாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இதில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் பிடிக்கப்பட்டனர்.
இதில் இதுவரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த ரயில் பயணிகளிடம் 1லட்சத்து 64ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர் கைது!