மதுரை: முன்பெல்லாம் பயணிகள் ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் (Unreserved Tickets) ரயில் நிலைய பதிவு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தன. அதனால், டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். அதனைத் தொடர்ந்து, பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் பயணச்சீட்டு பெற தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக செல்பேன் வாயிலாகவே பயணச்சீட்டு பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்தது. காகிதம் பயன்படுத்தாமல் பயணச்சீட்டு பதிவு செய்யும் இந்த முறை சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதாக பலராலும் பாராட்டப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு பயணிகளின் வசதிக்காக மதுரைக் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் செல்பேன் மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய திட்டத்தை பற்றி விளக்கி கூறவும், பிரச்சாரம் செய்யவும் மூத்த ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்களும் இந்த செயலி பற்றிய விபரங்களை பயணிகளுக்கு விளக்கிக் கூறினர். அதன் விளைவாக கடந்த ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக சுமார் 26 ஆயிரத்து 978 பயணிகள் இந்த பயணச் சீட்டுகள் மூலம் பயணம் செய்துள்ளனர்.
மேலும், தீவிர பிரச்சாரம் காரணமாக இந்த எண்ணிக்கை கடந்த ஜூலை மாதம் 68 ஆயிரத்து 631 ஆக உயர்ந்தது. மதுரை கோட்டத்தின் மொத்த பயணச் சீட்டு விற்பனையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 3.6 சதவீதமாக இருந்த செல்பேன் பயணச்சீட்டு பதிவு கடந்த ஜூலை மாதம் 5.78 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களுக்கு மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் டி.எல்.கணேஷ், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வின்போது, உதவி கோட்ட வர்த்தக மேலாளர்கள் பாலமுருகன், மணிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் 3 இல் தேர்தல்..!