நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழர்களை புகழ்ந்து பேசிவிட்டு தேர்தலுக்குப் பின், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தமிழர்களை இழிவாக பேசியது ஏன்? என்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியதாக கூறிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், செங்கோல் குறித்து பேசுவதற்கு பாஜகவிற்கு என்னத் தகுதியுள்ளது? என்று தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் 'மாமதுரை விழா' மற்றும் யோகா இந்தியா (YOUNG INDIA) அமைப்பு ஆகியவை இணைந்து ஆகஸ்ட் மாதம் 8,9,10,11 ஆகிய நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த விழா பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வண்ணம் பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மதுரை சின்ன சொக்கிக்குளம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இதில் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத்தில், செங்கோல் குறித்த என்னுடைய பேச்சின் தொடர்ச்சியாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு நான் மறுப்பு தெரிவித்து, நீண்ட விளக்கத்தை கொடுத்திருக்கிறேன். அது தவிர்த்து வேறு ஏதும் கூறுவதற்கு ஒன்றுமில்லை.
செங்கோல் குறித்து பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது?: செங்கோலுடைய குறியீடு இரண்டு விதத்தைக் குறிக்கிறது ஒன்று மன்னராட்சி; மற்றொன்று அறம் மற்றும் நேர்மையின் குறியீடு. அறம், நேர்மை பற்றிப் பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது? தேர்தலில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களை, தமிழ் மொழியை உயர்வாகப் பேசிவிட்டு தமிழ்நாடு தேர்தல் முடிந்தவுடன் உத்தரப் பிரதேசம், பீகார், ஒடிசாவில் தமிழர்களை இழிவாகப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ஜுன் 25 இனி அரசியலமைப்பு படுகொலை தினம்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! - june 25
ராகுல் காந்தி பேசியதை திரிக்காதீர்கள்: இதைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? எனக் கேள்வி கேட்டேன். அதை மட்டும் விட்டுவிட்டு மற்றொன்றை எடுத்துப் பேசுவது பாஜகவின் வழக்கம். மதத்தின் பெயரால் வன்முறை செய்பவர்களைப் பற்றி ராகுல் காந்தி பேசியிருக்கிறார். ஆனால், பிரதமர் மோடி இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி பேசியதாக மாற்றிக் கூறியுள்ளார். திட்டமிட்டுப் பல மாநிலங்களில் வெறுப்பை தங்களுக்கு சாதகமானதை மட்டுமே பேசி வருகிறார்கள்.
காந்தி மற்றும் அம்பேத்கர் சிலை எங்கே?: நாடாளுமன்றத்தின் வாசலில் காந்தி மற்றும் அம்பேத்கர் சிலை இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் மற்ற சிலைகளைக் கொண்டு வருகிறீர்கள். நாடாளுமன்றத்தில் இருந்த காந்தி மற்றும் அம்பேத்கர் சிலை எங்கே? என்பதற்கு பதில் சொல்லிவிட்டு மற்ற விவாதத்திற்கு வாருங்கள்.
சமூக இயக்கங்கள் அனைத்தும் பாஜகவின் ஏஜெண்டுகள். ராஜ் பவன் ஏஜென்ட் மட்டும் இன்னும் பேசவில்லை ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை. அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள், பழமை வாதிகள் பதற்றம் அடைகிறார்கள் என்றால் முற்போக்காளர்கள் சரியாக பணியாற்றுகிறார்கள் என்று அர்த்தம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது கோவை குட்டப்பா.. கொஞ்சம் காத்திருந்தால் சிட்டியாக வருவான்.. பொறியியல் மாணவர்கள் அசத்தல்!