சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. பின்னர், விசாரணையின் போது பல்வேறு மாணவர்கள் இதுபோல ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது தெரிய வந்தது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மாணவர்கள், பெற்றோர் ஆள்மாறாட்டம் செய்ய உதவிய தரகர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 27வது குற்றம் சுமத்தப்பட்ட நபராக உள்ள தருண்மோகன், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணையின் போது, நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் இந்தியாவில் இல்லாத ஒரு மாணவருக்கு மூன்று மாநிலங்களில் நீட் தேர்வு எழுதியது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததை சிபிசிஐடி போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் ஒத்துழைப்பு தராத தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று (ஆக 2) மீண்டும் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், "இந்த வழக்கில் குற்றவாளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளதாலும், நீட் தேர்வை தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டதால் மேலும் ஆதார் விவரங்கள் தேவைப்படுவதால் இந்த வழக்கில் சிபிஐ உதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, “நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் முறைகேடு என்பது மிகப்பெரிய ஒரு முறைகேடாக பார்க்க வேண்டும். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் உதவி கேட்கப்பட்டுள்ளது. இதில் சிபிசிஐடி போலீசாருக்கு தேவைப்படும் வழக்கு விசாரணை ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும்.
சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் தேவையான ஆவணங்களைக் கொடுத்து உதவி முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய முடியும். எனவே, மத்திய விசாரணை அமைப்புகள் சிபிசிஐடிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மத்திய விசாரணை அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சிபிசிஐடி நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது. எனவே, அவருடைய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் உத்தரவு பிறப்பித்தார். மேலும், நீட் தேர்வு ஆள் மாறாட்டம் முறைகேடு வழக்கை நான்கு மாதத்தில் சிபிசிஐடி விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு; ஏன் மத்திய கமாண்டோ படைகளை அனுப்பவில்லை? - செல்வப்பெருந்தகை கேள்வி! - selvaperunthagai criticise amitshah