மதுரை: சென்னையைச் சேர்ந்த கலைவாணி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் முதல் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை தமிழ் வழியில் படித்து, உரியச் சான்றிதழ்களை சமர்ப்பித்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பல கட்ட தேர்வுகளில் வெற்றி பெற்று 2022ஆம் ஆண்டு உதவி ஆட்சியராக பணியில் சேர்ந்தேன்.
நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பயிற்சி நிலையம் மூலம் விண்ணப்பித்து, 3 ஆண்டுகள் அஞ்சல் வழியில் படித்து, உரியக் கட்டணங்களைச் செலுத்தி பி.காம் தமிழ் வழியில் பட்டம் பெற்று உள்ளேன். ஆனால் மதுரை காமராஜர் பல்கலையில், நான் உரியக் கட்டணம் கட்டவில்லை. எனவே நான், மதுரை காமராஜ் பல்கலையில் முறைகேடு செய்த தமிழ் வழியில் பி.காம் படித்ததற்கான சான்றிதழ் பெற்றதாக, மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அறிக்கையில் நான் உள்பட 34 நபர்கள் பிஎஸ்டிஎம் படித்ததாக முறைகேடு செய்து சான்றிதழ் பெற்றதாக ஒரு வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் 34 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி எனக்கு பிஎஸ்டிஎம் சான்றிதழ் குறித்து விளக்கம் அளிக்க, ஷோகாஸ் நோட்டீஸ் (show cause notice) அனுப்பி உள்ளது.
என்னிடம் உரிய விளக்கம் பெறாமல், எனது சான்றிதழ்களைச் சரி பார்க்காமல், நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எனவே, மதுரை காமராஜர் பல்கலையில் செலுத்திய கட்டணத்தைப் பதிவு செய்யாமல் குளறுபடி செய்துள்ளனர். இதற்கு நான் பொறுப்பாக முடியாது. எனவே, நான் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியில் உள்ளேன். எனவே, டிஎன்பிஎஸ்சி-க்கு அனுப்பிய ஷோகாஸ் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர், மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர், மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "கோதண்டராமர் கோயில் அர்ச்சகர்களிடம் கண்ணில் பயம்" - ஆளுநர் ஆர்.என்.ரவி