மதுரை: கடந்த வெள்ளிக்கிழமை காலை சென்னை - செங்கோட்டை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் கடத்தியதாக, சென்னை கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என்பவரை மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக மதுரை யூனிட் அதிகாரிகள் (Directorate of Revenue Intelligence) மதுரை ரயில் நிலையத்தில் பிடித்தனர்.
அவரிடம் இருந்த இரண்டு பேக்குகளை சோதனை செய்ததில், 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. அதனையடுத்து, அதிகாரிகள் பிரகாஷை பிடித்து மதுரை ரயில்வே பாதுகாப்புபடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பிள்ளமன் பிரகாஷிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் தனது வீட்டில் 6 கிலோ மெத்தப்பெட்டமைன் உள்ளதாகவும், தன்னை தொடர்புகொள்ள முடியாவிட்டால் அவற்றை குப்பையில் போட்டுவிட வேண்டும் என தனது மனைவி மோனிஷா ஷீலாவிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிள்ளமன் பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே பிரகாஷிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, கொடுங்கையூர் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் 6 கிலோ போதைப்பொருள் பொட்டலத்தை போட்டதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் குப்பையில் இருந்து சுமார் 6 கிலோ மெத்தப்பெட்டமைனை பறிமுதல் செய்தனர். பிரகாஷின் மனைவி மோனிஷா ஷீலாவையும், அவருக்கு உதவியதாக ஜேசுதாஸ் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) விசாரணைக்காக விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனையடுத்து இருவரிடமும் அதிகாரிகள், 20 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இதில் பிரகாஷின் மனைவி மோனிஷா ஷீலா தனியார் பள்ளி ஒன்றில் பணி புரிந்துவந்து தெரியவந்துள்ளது. மேலும், பிள்ளமன் பிரகாஷ் மற்றும் மோனிஷா ஷீலாவிற்கு ஜேசுதாஸ் என்பவர் உதவி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இருவரையும் இன்று (திங்கட்கிழமை) காலை மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக அதிகாரிகள் (DRI) மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி செங்கமலசெல்வன் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர், இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி செங்கமலசெல்வன் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோவை தனியார் பள்ளிக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சம்