மதுரை: தேனி, விருதுநகர், மதுரை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய, 10 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படை மற்றும் நிலைக்கண்காணிப்புக் குழுவினருடன், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர் சங்கீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 16) ஆலோசனை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளோம். நாளை மறுநாள் (மார்ச் 19) துணை வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலான நிலையில், பொதுமக்கள் 49 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துச் செல்லலாம்.
பொதுமக்கள் G- VIGIL மற்றும் SUVITHA ஆகிய செல்போன் செயலி (APP) மூலம் புகார் அளிக்கலாம். மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 18004255799, 0452-2535374, 375, 376, 377, 378 என்ற எண்களைத் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம். மதுரை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பறக்கும் படையினர் சோதனையை தொடங்கி உள்ளனர்.
வியாபாரிகள் எடுத்துச் செல்லும் பணத்திற்கான உரிய ஆவணத்தை வழங்கினால், பணம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற பணத்தை பறிமுதல் செய்வது மற்றும் ஒப்படைப்பு தொடர்பாக தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சத்து 77ஆயிரத்து 220 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு படையினர், ஒரு வீடியோ குழு என தலா 8 மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி என்ற அடிப்படையில் அவர்கள் சோதனையில் ஈடுபடுவார்கள். வங்கிகளில் பணப்பரிமாற்றம் தொடர்பாக, தினசரி வங்கிகள் அறிக்கைகளை சமர்பிப்பார்கள். தினசரி வங்கி பணப்பரிமாற்றத்தை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஏற்கனவே, அனைத்து வங்கி அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி உள்ளோம்.
மேலும், மதுரை மாவட்டத்தில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. சித்திரை திருவிழா தொடர்பாக ஏற்கனவே, ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்த நிலையில், தற்போது சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'புதுச்சேரியில் வேட்பாளர்களிடம் ரூ.50 கோடி லஞ்சம் கேட்ட பாஜக' - நாராயணசாமி குற்றச்சாட்டு