மதுரை: மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சத்தியசீலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மே 22ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது ராமர் என்பவரை முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக என் மீதும் புகார் எழுந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இடம்பெறாத நிலையில், என் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
மேலும், சத்தியஷீலா கைது செய்யப்பட்டதால், இந்த வழக்கை ஜாமீன் கோரும் வழக்காக விசாரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "தனது பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பது தொடர்பான பணிகள் இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரப்பட்டது.
ஆனால், இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மார்பிங் புகைப்படங்கள் விவகாரம்; உயர் நீதிமன்றக்கிளை முக்கிய கருத்து!