மதுரை: சிவகங்கை மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்த பாஜக இளைஞர் அணியின் மாநில துணைத் தலைவர் துரைராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "காரைக்குடி பாளையநாட்டில் உள்ள 16 கிராமங்களில் ஒன்றாக காரைக்குடி உள்ளது. இங்கு கொப்புடையம்மன் என்ற கொப்பை நாயகி அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயில் 1991ஆம் ஆண்டு முதல் அறங்காவலர் நியமனம் செய்யப்படாமல், இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், இக்கோயிலில் சாமிக்கு அனுவிக்கக் கூடிய ஆபரணங்கள் 2015ஆம் ஆண்டு சரி பார்த்தபோது, 189.110 கிராம் தங்கம், 14 கிலோ வெள்ளி, 10 செட் வைரக் கற்கள், 5 வெள்ளை கற்கள், 1 விலை உயர்ந்த சிவப்பு கற்கள் காணவில்லை.
அவற்றின் அன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.86 லட்சம் ஆகும். இந்த ஆபரணங்கள் காணாமல் போனது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2015ஆம் ஆண்டு கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கோயில் செயல் அலுவலர்களாக செல்வி, அகிலாண்டேஸ்வரி, பிரதீபா, சுமதி, பழனி, மகேந்திர பூபதி என ஆறு பேர் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சாமியின் ஆபரணங்கள் தற்போது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளது.
எனவே, மாயமான சுவாமியின் தங்க வைர ஆபரணங்களை மீட்க வேண்டும். மேலும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் தரப்பிலிருந்து நகைகளை செப்பனிடும் போது சில நகைகள் குறைவு ஏற்பட்டது உண்மை எனவும், சம்பந்தப்பட்ட செயல் அலுவலரை பொறுப்பாக்கி நகையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கவில்லை எனவும் கூறினார்.
பின்னர், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருள் சுவாமிநாதன் ஆஜராகி, "கோயில் நகைகள் மாயமானது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என வாதிட்டார். அப்போது நீதிபதி, “சம்பவம் நடைபெற்ற பிறகு 6 செயல் அலுவலர்கள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர்.
ஆனால், சம்பவம் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும், புகாரும் தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் கோயில் செயல் அலுவலரை தாமாக வழக்கில் சேர்த்து, நகை மாயமானது குறித்து கோயிலின் செயல் அலுவலர் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் உரிய புகார் அளிக்க வேண்டும். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அறிக்கையை தாக்கல் செய்ய” உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: திருவிழாவில் ஆட்டின் ரத்தத்தைக் குடித்த பூசாரி உயிரிழப்பு.. ஈரோட்டில் சோகம்!