மதுரை: விருதுநகரைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “விருதுநகர் மாவட்டம் சோலைசேரியில் எனது சொந்த பயன்பாட்டிற்காக 15 சென்ட் நிலம் வாங்கி அதனை முறையாக பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் கட்டி பதிவு செய்யச் சென்றேன்.
நான் வாங்கி பதிவு செய்யச் சென்ற இடம் பதிவு செய்ய முடியாது என பதிவாளர் பதிவு செய்ய மறுத்துவிட்டார். அதற்கு காரணம் கேட்டபோது பத்திர பதிவுச் சட்டம் 22 ஏ2 (2017 ஆண்டு சட்டம்) பிரிவின்படி அங்கீகாரம் செய்யாத மனை நிலங்களை பதிவு செய்ய முடியாது என தெரிவித்து விட்டனர்.
மேலும், இந்த சொத்துக்களை விற்பனை செய்வதே தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இந்த பதிவுச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல, இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஒவ்வொருவரும் சொத்துக்களை வாங்க, விற்பனை செய்ய உரிமை உள்ளது.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில், பத்திர பதிவுச் சட்டம் 22 A2 நடைமுறைப்படுத்த தடை விதிக்க வேண்டும். எனது நிலத்தை பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும்” என மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர், பத்திரப்பதிவுத்துறை தலைவர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு; 15 மாதத்தில் முடிக்க உத்தரவு!