மதுரை: தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தார் ஆசிக் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "எங்கள் ஊர் தொண்டி அருகே சோழியக்குடியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இக்கடலில் சிறிய ஜெட்டி பாலம் மீனவர்கள் நலன் கருதி கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் மூலம் தான் மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட பொருட்களை படகுகளில் ஏற்றுவதும், மீன்பிடித்து திரும்பி வந்து மீன் உள்ளிட்ட பொருட்களை இறக்குவதும் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், பாலம் மிகப்பெரிய அளவில் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும், பாலத்தின் நடுவில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இது மீனவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரவு நேரத்தில் மீன் சரக்குகளை கொண்டு செல்ல மீனவர்கள் அவதிப்படுகின்றனர். இந்த பாலம் படகுகளை கடல் பகுதியில் நிறுத்தி சரக்குகளை ஏற்ற இறக்க வசதியாக உள்ளது. இல்லையென்றால் மீனவர்கள் தலை சுமையாக சரக்குகளை தூக்கி செல்ல வேண்டும் என்ற நிலையே உள்ளது. தற்போது ஜெட்டி பாலம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையிலும், பாலத்தின் நடுவில் மேற்படி பெரிய ஓட்டை விழுந்துள்ளதால் இரவு நேரத்தில் அடிக்கடி மீனவர்கள் தவறி விழுந்து விபத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், ஜெட்டி பாலத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளும், உடன் அழைத்துவரும் குழந்தைகள் விழுந்து பெரிய அளவில் விபத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், ஜெட்டி பாலத்தை உடனடியாக சீரமைத்து விபத்து அபாயம் நடைபெறுவதற்கு முன்பு பொதுமக்களையும், மீனவர்களையும் காத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களை பார்க்கும்போது, பாலம் மிகவும் ஆபத்தான முறையில் உள்ளதே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திலக் குமார், மனுதாரர் குறிப்பிடும் ஜெட்டி பாலத்தை இடித்து புது பாலம் அமைப்பதற்காக அரசு தரப்பில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரர் கோரிக்கை குறித்து அரசு உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளது. மேலும், அரசு குறிப்பிட்டுள்ள பணி சரியாக ஒரு வருடத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம்" எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்