மதுரை: பழனி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி, திருச்சி முத்து செல்வம் உள்ளிட்ட தேர்வர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில், ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப் 4 எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. பணி நியமன அறிவிப்பிற்கு முன்னதாக, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை வெளியிட வேண்டும். ஆனால், டிஎன்பிஎஸ்சி அவ்வாறு வெளியிடாது. பணி நியமன செயல்முறை முடிந்த பிறகுதான் டிஎன்பிஎஸ்சி வெளியிடும்.
இதனால் தேர்வர்கள் பாதிக்கப்படுவர். எனவே, சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளியிடுவதற்கு முன் வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறி உள்ளனர்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளியிடுவதற்கு முன் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்; சத்குருவின் புதிய புத்தகம் அறிமுகம்! - SADHGURU NEW TAMIL BOOK LAUNCH