மதுரை: திருநெல்வேலியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2009ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வாகனத்தில் இருந்த நபர்கள், காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்ப முயன்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரித்தபோது, அவர்களிடமிருந்து அரிவாள், ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டது.
மேலும், விசாரணையின் போது, தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி இந்த வழக்கில் எனது பெயர் திட்டமிட்டு காவல் துறையினர் சேர்த்துள்ளனர். ஆனால் தனக்கும், குண்டு வீச்சு சம்பவத்திற்கும் எவ்வித சம்பந்தமில்லாத நிலையில், தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். எனவே, தன் மீது பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குற்றம் சாட்டப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில்
13 வழக்கில் மட்டுமே முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு வழக்கில் மிகவும் முக்கிய வழக்குகளாக கருதப்படும் நிலையில், இந்த வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு சாட்சியம் உள்ளது” எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “குற்றம் சாட்டப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ராக்கெட் ராஜாவிற்கு தொடர்பு இல்லை எனக் கூறுவதற்கு எவ்வித முகாந்திரம் இல்லை. எனவே, இவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது” எனக் கூறி, ராக்கெட் ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வேலூர் நாதக வேட்பாளர் உள்பட 103 பேர் வழக்குப்பதிவு! - Vellore NTK Candidate Case