மதுரை: மதுரையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் அருள்தாஸ் என்பவர் அளித்த புகாரின் பேரில், சையது முகமது என்பவர் விசாரணைக்காக 14.10.2014-இல் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டார்.
அப்போது, சையது முகமது மதுபோதையில் இருந்தார். என் அறையில் மேஜையில் இருந்த கத்தியை எடுத்து என்னைத் தாக்க முயன்றார். இதனால், என்னை தற்காத்துக் கொள்ள துப்பாக்கியால் சுட்டேன். இதில், அவர் காயமடைந்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இறுதியில் எனக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் 14.11.2019-இல் உத்தரவிட்டது.
நான் முன்விரோதம் காரணமாக சையது முகமதை சுடவில்லை. என்னை தற்காத்துக் கொள்ளவே துப்பாக்கியால் சுட்டேன். எனவே, ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், குமரப்பன் அமர்வில் பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், இன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “SI காளிதாஸ், தற்காத்துக் கொள்வதற்காகவே சுட்டு உள்ளார். விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் கத்தியை எடுத்து தாக்க முற்பட்டு உள்ளார்.
இந்த வழக்கை போலீசார் சில தடயங்களை முறையாக உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை” என கருத்து தெரிவித்த நீதிபதிகள், உதவி ஆய்வாளர் காளிதாசுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல்!