மதுரை: மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு வாழ்த்துக்கள். அதேபோன்று, தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மட்டுமல்லாது, அதிக வாக்குகள் பெற்ற சீமான் மற்றும் அண்ணாமலை, புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள் ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி, இந்திரா காந்தியால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன் கருதி தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க இயலாத நிலை நிலவுகிறது, படகுகள் சேதப்படுத்தப்பட்டு வலைகள் அறுக்கப்படுகின்றன. இதற்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பது தான்.
தற்போது எஞ்சியுள்ள ஈழத் தமிழ் மக்களை பாதுகாக்க தமிழீழத்தை உருவாக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருமாறு இந்த சமயம் தரப்பில் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த அவர், “ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தவர் இன்றைய பிரதமர் மோடி. கச்சத்தீவு குறித்து தேர்தல் காலம் மட்டுமின்றி எல்லா நேரத்திலும் பேசப்பட்டு வருகிறது. அதற்காக நானும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இதுவரை நாட்டை ஆண்டவர்கள் எதுவும் செய்யவில்லை. தற்போது இதுகுறித்து பேசப்படுவதையே நான் வரவேற்கிறேன்.
தற்போது மோடி தலைமையில் கூட்டணி ஆட்சியாக அமைந்தாலும் இதனை நிச்சயம் நிறைவேற்றித் தருவார். இந்த முறை அனைவருக்கும் தமிழக மக்கள் பாரபட்சமின்றி தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். இதற்கிடையில், இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த நபர்களும் இவர்களோடு வெற்றி பெற்றுள்ளனர், அதுதான் வேதனை தருகிறது. தமிழீழம் கிடைக்க மோடி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என சீமான் தரப்பிலிருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தான் இந்த கோரிக்கையை நான் முன் வைக்கிறேன்.
இந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அதுதான் ஜனநாயகம். ஏன் பெருந்தலைவர் காமராஜரும் இந்த ஜனநாயக முறையைத்தான் வரவேற்றார். வெற்றியோ, தோல்வியோ ஜனநாயகத்தில் மக்கள் தான் மன்னர்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பல மாநில அரசுகளை கலைத்திருக்கிறார்கள். அதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.
ஆனால், பாஜக ஆட்சியில் ஒரு மாநில அரசு கூட கலைக்கப்பட்டதில்லை. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பில் அமர்த்தியது பாஜக அரசுதான். இதேபோன்ற பெருமையை அப்துல் கலாமுக்கும் வழங்கினர். எல்லா மதங்களையும் ஆதரித்து அனுசரித்துச் செல்கின்ற பிரதமராக மோடி திகழ்கிறார். தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி வைத்திருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருந்தால் அவர்களும் நிறைய சீட்டுகளை வென்றிருக்க வாய்ப்புண்டு" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'காலம் உள்ள வரை கலைஞர்' கண்காட்சியக்ம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விசிட்!