சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் நல சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, குழுவின் சார்பில் சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்னிந்தியாவின் தாய் பல்கலைக்கழகமாக 167 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சென்னை பல்கலைக்கழகத்தை முடக்கும் விதமாக இந்த வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கி உள்ளது.
பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டிற்கு மாதத்திற்கு 20 கோடி ரூபாய் செலவாகும் நிலையில் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசிடம் முறையிட்டுள்ளோம் திடீரென வருமானவரித்துறை 424 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனத் தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆண்டுதோறும் பல்கலைக்கழகக் கணக்குகளை எங்களது ஆடிட்டர் முறையாக வருமானவரித்துறையிடம் கொடுத்து வருகிறார். அரசிடம் மானியம் தரும்படி தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறோம். துணைவேந்தர் இல்லாத எங்கள் பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்விச் செயலாளரைத் துணைவேந்தராகச் செயல்படும் விதி உள்ளது. எனவே உயர் கல்வித்துறைச் செயலரிடம் நாங்கள் இந்த விஷயத்தை எடுத்துக் கூறியுள்ளோம்.
இறுதியாக நாளை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள விவகாரத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் விதமாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்குக் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்!