சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தொழில் முனைவோர் பிரிவு சார்பில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையில் 9வது ஆண்டாக தொழில் முனைவோர் உச்சி மாநாடு நேற்று (மார்ச் 7) முதல் வருகிற 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இளையோர் மாநாடு, கண்டுபிடிப்பாளர்களின் மாநாடு, வை பிசினஸ் வழங்கும் ஸ்டார்ட் அப் மாநாடு உள்ளிட்ட மாநாடுகளை கொண்ட இ - உச்சி மாநாட்டில் 50க்கும் அதிகமான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
ஐஎஸ்ஓ, ஸ்டார்ட் அப் இந்தியா, யுனெஸ்கோ சான்றிதழ்களை பெற்றுள்ள மாணவர்களால் நடத்தப்படும் இந்த தொழில் முனைவோர் சந்திப்பு இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெறுகிறது. அனைவரும் இலவசமாக பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள், 50-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், இந்தியா முழுவதும் உள்ள 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சார்ந்த 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், நூறு புத்தாக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் அதிநவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பங்கேற்க உள்ள பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளன. இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும் போது, “சென்னை ஐஐடி மேற்கொண்டு வரும் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் மூலமாக வருடத்திற்கு ஒரு சிறந்த கண்டுபிடிப்பு உருவாகும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தாண்டில், 366 காப்புரிமை கிடைத்துள்ள நிலையில், அடுத்தாண்டு இது இன்னும் இரட்டிப்பாகும். தொழில்முனைவோராக விரும்புவோரின் யோசனைகளை செயலாக்கி அவரை தொழில்முனைவோர் ஆக்குவது வரை அனைத்தும் இந்த வளாகத்திலேயே உள்ளது. பள்ளி அளவில் மாணவர்களை தொழில்முனைவோர்களாக மாற்ற அறிவுறுத்துகிறோம். எல்லாருக்கும் வாய்ப்பு வழங்கும் நிலையில், ஐஐடி ரிசர்ச் பார்க்கில் பெரும்பாலும் மற்ற கல்லூரி மாணவர்கள் தான்.
ஒரு இளம் தொழில் முனைவோர் உருவாவதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை மேற்கொண்டு வருகிறோம். வெற்றிகரமான தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருப்பவர்கள் சென்னை ஐஐடி மாணவராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆராய்ச்சி பூங்காவிற்கு சென்றால் அதில் 20 சதவீதம் பேர் தான் சென்னை ஐஐடி மாணவர்கள் இருக்கின்றனர். மீதி 80 சதவீதம் பேர் பிற கல்லூரி மாணவர்களாகத்தான் இருக்கின்றனர்.
எனக்கு இந்த கம்பெனியில் 1.5 கோடி கிடைத்தது அந்த கம்பெனியில் கிடைத்தது என்று கூறுவது பெரிய விஷயம் அல்ல. 2025-ல் 20 சதவீதம் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள் சென்னை ஐஐடியில் படித்தவர்கள் என்ற பெருமையை கொடுக்க வேண்டும் என மாணவர்களுக்கு வலியுறுத்தியுள்ளேன். காப்புரிமை என்பது சரஸ்வதி தான், கமர்சியலானதும் லட்சுமி பிறகு வரும்.
தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொண்டதில் கடந்த ஆண்டு 2 கோடி ரூபாயாக இருந்த வருவாய், 18 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது அடுத்த ஆண்டு 36 கோடி ரூபாயாக உயர வேண்டும். இங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் ஸ்டால்களில் 90% மாணவர்கள் தமிழ்நாடு தான். அதிக அளவில் கோயம்புத்தூர், மதுரையில் இருந்து அதிக அளவில் பங்கேற்று உள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: கல்வெட்டுகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு!