சென்னை: கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், ஜனவரி 22ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், மீனவர் பிரச்னைக்கு தீர்வுக்கான இரு நாடுகளுக்கு இடையே கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு, அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மௌரியா, நேற்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, இதுபோன்ற நிகழ்வுகள் ஏன் தொடர்ச்சியாக நிகழ்கிறது என மத்திய - மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர்.
மேலும், “மீனவர்களின் படகுகள் சேதமடைந்தால், எப்படி மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும்? விடுதலை செய்யப்பட்டாலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதே என தெரிவித்த நீதிபதிகள், கைது செய்யப்படும் மீனவர்களின் குடும்பத்தினருக்கு நாளொன்றுக்கு ரூபாய் 250 நிவாரணம் வழங்கப்படுகிறது. இத்தொகையைக் கொண்டு எப்படி குடும்பத்தை நடத்த முடியும் எனக் கேள்வி எழுப்பினர். இந்த தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: அமலுக்கு வந்தது சிஏஏ சட்டம்.. மத்திய அரசு அறிவிப்பு!