சென்னை: குற்ற வழக்குகளில் காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த வழக்குகளிலிருந்து நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அந்த வழக்குகளை ஆய்வு செய்ய காவல்துறை மற்றும் குற்றத் தொடர்வுத் துறை மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும் என 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் அனைத்து மாநிலங்களின் காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையில் உள்ள குறைகளைக் கண்டறியவும், இளம் அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி அளிக்கவும், வழக்கைத் திறம்பட எடுத்துச் செல்லாத காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.நடராஜன் 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி தரப்பில், உதவி ஐ.ஜி-யான எஸ்.சக்தி கணேசன் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அரசின் அறிவுறுத்தலின்படி காவல்துறை மற்றும் குற்ற வழக்கு தொடர்வு துறை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் மாவட்டம் மற்றும் மாநகர அளவில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் மறு ஆய்வு செய்யப்பட்டு, திறம்படச் செயல்படாத 13 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அளித்த அறிக்கையிலிருந்து, மனுதாரர் கோரிக்கை நிறைவேறியுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்..!