சென்னை : வேலூரைச் சேர்ந்த சிந்துஜா - சரவணகுமார் ஆகிய இருவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் கணவர் மீது சிந்துஜா வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில், சிந்துஜாவிடமிருந்து 75 சவரன் தங்க நகை, 11 வெள்ளிப் பொருட்கள், 5 லட்சம் ரூபாய் வரதட்சனை பணம் மற்றும் கார் வாங்க 5 லட்சம் ரூபாய் பெற்றதாக சரவணகுமார் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து கணவரிடமிருந்து பொருட்களை மீட்டுத்தரக்கோரி வேலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் சிந்துஜா வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சிந்துஜா மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவ்வழக்கில், என் கணவர் ஜீவனாம்சமாக 5 லட்சம் ரூபாயை 2 வாரத்தில் தருவதாக கடந்த வழக்கு விசாணையில் உறுதியளித்தபடி அளிக்கவில்லை. எனவே, இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையில் சரவணகுமார் மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதை ஏற்றுகொண்ட நீதிமன்றம் மனைவிக்கு ஏதும் தர தேவையில்லை என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிந்துஜா தரப்பில் குடும்ப நல நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும், வழக்கு செலவாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும், சமரச தீர்வு மையத்தை அனுகி சுமூகமாக பேசி தீர்க்கவும் உத்தரவிட்டது.
அதன்படி, சமரச தீர்வு மையத்தில் இரு தரப்புக்கு இடையே பேசி சரவணக்குமார் மனைவி சிந்துஜாவுக்கு 45 சவரன் தங்க நகைகள், 10 வெள்ளி பொருட்கள், 56 வகையான இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள், 13 வீட்டு உபயோக பொருட்களை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சிந்துஜா மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொய்யான தகவல்களை கூறி குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த என் கணவரிடமிருந்து உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணன், குடும்ப வன்முறை சட்டம் 18ன் படி பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை முதலில் உறுதிபடுத்த வேண்டும். பிரிவு 19ன் படி மனைவிக்கு இழப்பீடு பெற முழு உரிமை உள்ளது. மேலும், குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் படி குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
அந்த இழப்பீடு பாதிக்கப்பட்டவர் வாழ்வாதாரத்தை நடத்த போதுமானதாக இருக்க வேண்டும். விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் கேட்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்டவருக்கு ஜீவனாம்சம் பெறும் உரிமையை மறுக்க முடியாது. அதனால் குடும்பநலநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிந்துஜாவிற்கான உரிய இழப்பீடு குடும்பநல நீதிமன்றம் நிர்ணயிக்கலாம் என உத்தரவிட்டார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-10-2024/22657328_whatsup.jpg)
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்