சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடிக் கம்பங்களை நட்டுள்ளதாகக் கூறி வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அரசியல் கட்சிகள், தங்கள் அரசியல் மேடையாகப் பயன்படுத்தி கொடிக் கம்பங்களை நடுவதால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்களின் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், 45 இடங்களில் 89 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 இடங்களில் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கின் விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் இந்தியத் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளை வழக்கில் சேர்ப்பதற்கு மனுதாரருக்கு அனுமதி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொன்முடியின் சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு.. நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன?