சென்னை: கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஷ், முத்து சரவணன் ஆகியோர், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பதுங்கியிருந்தபோது, காவல்துறை பிடிக்க முயன்றதாகவும், தங்களை தாக்கிவிட்டு தப்பித்து ஓடியதால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பூந்தமல்லி துணை ஆணையர் ஜவஹர் தலைமையிலான காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், தப்பிக்க முயன்றதாக கூறும் காவல்துறையின் குற்றச்சாட்டு தவறு எனக் கூறி, என்கவுன்டர் சம்பவத்தில் சந்தேகம் உள்ளதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ரவுடி முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணை தொடங்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார். முதலில் சிபிசிஐடி விசாரணை நடத்தட்டும், அதில் திருப்தி இல்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீதிபதி அறிவுறுத்தி, சிபிஐ விசாரணை கோரிய வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!