சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கை, பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவிகள், விசாகா குழுவில் புகார் அளித்துள்ளார்களா என விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். அதனை பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாகா குழுவுக்கு அனுப்பியிருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், மாணவிகளின் புகாரை விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது சம்பந்தமாக விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கல்லூரி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, ஆறு ஆண்டுகள் கடந்தும் மாணவிகளின் புகாரை விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன் என்று கேள்வி எழுப்பி, ஜூன் 7ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என கல்லூரி தரப்புக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:''பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு'' - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்! - Lok Sabha Election 2024