சென்னை: சென்னையில் மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், 77.70 ஏக்கர் அரசு நிலம் 1933 மற்றும் 1935-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாண அரசால், கோல்ஃப் மைதானம் அமைப்பதற்காக, காஸ்மோபாலிட்டன் கிளப்பிற்கு குத்தகைக்கு விடப்பட்டது.
இதில் 1971-1996ஆம் ஆண்டின் இடையேயான காலத்திற்கு உரிய குத்தகை பணத்தைச் செலுத்தவில்லை எனக் கூறி, 119 கோடியே 78 லட்சத்து 58 ஆயிரத்து 312 ரூபாய் குத்தகை செலுத்த வேண்டும் என்று, மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் 2004-ஆம் ஆண்டு காஸ்மோபாலிட்டன் கிளப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீசை எதிர்த்து காஸ்மோபாலிட்டன் கிளப் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2004-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2015-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதிக்குள்ளாக 25 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், குத்தகை வசூல் நடவடிக்கை தொடர்பான நோட்டீசில் உரிய விசாரணையை மேற்கொண்டு, உண்மையான குத்தகை பாக்கியை தீர்மானிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, காஸ்மோபாலிட்டன் கிளப் தரப்பில் மேல்முறையீட்டு மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவானது, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், குத்தகை நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனவும், மாவட்ட ஆட்சியரோ மற்றும் வட்டாட்சியரோ நோட்டீஸ் அனுப்பவோ, குத்தகையை உயர்த்தவோ?அதிகாரம் இல்லை எனவும் கூறினர். மேலும், 119 கோடியே 78 லட்சத்து 58 ஆயிரத்து 312 ரூபாய் குத்தகை செலுத்த வேண்டும் என்று மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் 2004-ஆம் ஆண்டு காஸ்மோபாலிட்டன் கிளப்பிற்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தும், அதேபோல தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நாளை வெளியாகிறதா திமுக வேட்பாளர் பட்டியல்? - அமைச்சர் துறைமுருகன் தகவல்!