சென்னை: கொடுங்கையூரைச் சேர்ந்தவர், சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு இரவு 11 மணிக்கு பகுதி நேரமாக வேலை பார்க்கும் மருந்தகத்திலிருந்து வேலையை முடித்து விட்டு, சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரை வழிமறித்த கொடுங்கையூர் காவல்துறையினர், மாஸ்க் போடவில்லை என்று கூறி ரூ.1,500 அபராதமாக கட்ட சொல்லி உள்ளனர்.
அதற்கு மாணவர் மறுக்கவே, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று லாக் அப்பில் அடைத்து தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை அந்த மாணவர் தனது மொபைல் போனில் ரகசியமாக பதிவு செய்துள்ளார். இதையடுத்து, மாணவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மாணவர் தரப்பில் தாக்குதல் நடத்தியதாக 9 போலீசார் மீது புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகார் மீது விசாரணை நடத்திய கொடுங்கையூர் ஆய்வாளர், வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதில் 2 போலீசார் மீது மட்டும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, மாணவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய விசாரணை நடத்துமாறு அண்ணாநகர் துணை கமிஷனருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய அதிகாரி, வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட போலீசாரின் பெயர்களை நீக்கம் செய்து புகாரை முடித்து வைத்தார். இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அப்துல் ரஹீம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, மனுதாரர் கொடுத்த புகார் மீதான வழக்கை போலீசார் முடித்து வைத்து விட்டதாகத் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்திய அதிகாரி, சம்பந்தப்பட்ட போலீசாரின் பெயர்களை வழக்கிலிருந்து நீக்கியதுடன், புகாரையும் முடித்துவைத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஆர்.டி.ஓ அறிக்கை வருவதற்கு முன்பே புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவரின் செல்போன் பதிவுகள் தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள வீடியோ பதிவுகள் பென்டிரைவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதைக்கூட விசாரணை அதிகாரி கணக்கில் எடுக்கவில்லை.
போலீசாரைக் காப்பாற்றவே விசாரணை அதிகாரி முயன்றுள்ளார். உண்மை என்ன என்பதைக் கண்டறிய முயற்சி செய்யவில்லை. இந்த வழக்கின் ஆவணங்களைப் பார்க்கும்போது, சிபிசிஐடி போலீசார் மேல் விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிப்படும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது.
வழக்கு தொடர்பான ஆவணங்களை அண்ணாநகர் துணை கமிஷனர், சிபிசிஐடி கூடுதல் டிஜிபியிடம் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். வழக்கை ஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க கூடுதல் டிஜிபி உத்தரவிட வேண்டும்.
விசாரணையை 3 மாதங்களில் முடித்து, நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: மத்திய பிரதேச தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து! எப்படி நடந்தது?