சென்னை: சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞரும், மதுரவாயலைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இரவு பயிற்சி முடிந்து அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரஃபிக் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அந்த வழியாக வந்த கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவனிடம், மனோவின் மகன்கள் மற்றும் அவரது நண்பர்கள் மது போதையில் தகராறு செய்து அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, கிருபாகரன் என்ற இளைஞரும், 16 வயது சிறுவனும் மதுபோதையில் தங்களை தாக்கியதாக பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் சாஹிர், ரஃபீக் மற்றும் அவர்களது நண்பர்கள் தர்மா (23), விக்னேஷ் (28) ஆகிய நான்கு பேர் மீதும் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தது மட்டுமல்லாது, மனோவின் மகன்களின் நண்பர்களான தர்மா மற்றும் விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
ஆனால், சம்பவத்தன்று பின்னணி பாடகர் மனோவின் மகன்களை மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று உருட்டுக் கட்டை மற்றும் கற்களைக் கொண்டு தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மனோவின் மகன்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.