சென்னை: வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அடிமாடுகளை சட்டவிரோதமாக கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரி, 2002ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், உரிய சான்றிதழ் இல்லாமல் மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவை முறையாக பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜரான டிஜிபி, உரிய சான்றிதழ்களுடன் மட்டுமே மாடுகளை கொண்டு செல்ல வேண்டும் என சோதனைச் சாவடிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மாடுகள் உரிய சான்றிதழ் இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் அடுத்த 3 வருடத்தில் நாட்டு மாடு இனங்களே இல்லாத நிலை உருவாகும் என யானை ராஜேந்திரன் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
எனவே, விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல், மாடுகளை வாகனங்களில் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், அவ்வாறு மீறி கொண்டு செல்லப்பட்டால், மாடுகள் கொண்டு செல்லப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, மாடுகளை மீட்டு கோசாலையில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: "தேர்தல் டெபாசிட் கட்டி ரூ.1 கோடி இழந்துள்ளேன்!" 239வது முறையாக மனுத்தாக்கல் செய்த பத்மராஜன்