சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கூட்டாக பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், பெண்களின் பாதுகாப்பிற்கு போதுமான சட்டங்கள் இருந்தாலும், அதை அமல்படுத்துவதில் நம்பகத்தன்மை இல்லையென்றும், பல வழக்குகளின் இறுதியில் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதாக தெரிவித்திருந்தனர்.
பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் பெண்கள் பயணிக்கும் போது பாலியல் சீண்டலுக்கு ஆளாவதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், காவல் நிலையங்களுக்கு பெண்கள் புகார் அளிக்கச் செல்லும்போது, காவல்துறையினர் உரிய முறையில் அணுகுவதில்லை என தெரிவித்திருந்தனர்.
எனவே, தமிழகத்தில் உள்ள பிரதான பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும் எனவும், பணி, கல்வி நிமித்தமாக நள்ளிரவு நேரங்களில் பேருந்து, ரயில் நிலையம் வரக்கூடிய பெண்கள் தங்குவதற்கு பாதுகாப்புடன் கூடிய விடுதிகளை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 13 ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 19 பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக நிர்பயா நிதியின் கீழ் காவல் நிலையங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு சார்பில், கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "மாஞ்சோலை தொழிலாளிகளை விரட்டும் பிபிடிசிக்கு அரசு உதவி செய்கிறது" - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! - Manjolai estate issue