சென்னை: வீட்டு பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜனவரி 25ஆம் தேதி தனிப்படை போலீசார் இருவரையும் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, இருவரும் சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிப்ரவரி 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிப்ரவரி 6ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து, இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இது குறித்த அவர்களது மனுவில், “தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. குடும்ப உறுப்பினர் போன்று பணிப்பெண்ணை நடத்தினோம். நாங்கள் அவரை கொடுமைப்படுத்தவில்லை.
அவருக்கு போதிய பாதுகாப்பும், கல்வியும் வழங்கினோம். பொங்கலுக்கு முன்பாக ஏற்காடு சுற்றுலா சென்றுவிட்டு, பொங்கலுக்கு தேவையான பொருட்களுடன் அவரது வீட்டில் விட்டுவிட்டு வந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறவில்லை. மேலும், ஜனவரி 16ஆம் தேதி ஊரில் தங்கியிருந்த நிலையில், ஜனவரி 15ஆம் தேதி சென்னையில் புகார் அளிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
யார் சாதிப் பெயரைச் சொல்லி திட்டினார்கள் என்று குறிப்பிட்டு, எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படாத நிலையில், தங்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது நியாயமற்றது” என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த மனு இன்று (பிப்.15) நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், காவல்துறை பதிலளிக்க அவகாச கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், அன்றைய தினம் பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “தமிழகத்தில் ஆண்டிற்கு 17% பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியேறுகின்றனர்” - பழனிவேல் தியாகராஜன்!