சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்ற இளைஞரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கைதான ஞானசேகரன் என்ற நபர் “திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும், அவர் மீது இதுபோன்ற குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, ஞானசேகரன் திமுக நிர்வாகி என்ற தகவல் பரவியது. தொடர்ந்து, அவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (டிசம்பர் 26) வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “அண்ணா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், மாணவி புகார் அளித்த ஆறு மணி நேரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட ஞானசேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபர் கைது!
திமுக-வுக்கு சம்பந்தம் இல்லை: சிலர் அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்ற செய்தியை பரப்பி வருகின்றன. சமூக ஊடகங்களில், அவர் துணை முதலமைச்சரோடும், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுடன் மரியாதை செலுத்துவது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஆனால், திமுகவிற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் திமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லை.
மூடி மறைக்க அவசியம் இல்லை: கைதான ஞானசேகரன் சைதாபேட்டை தொகுதியைச் சேர்ந்தவர். அத்தொகுதி எம்.ஏ.வான அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் நன்றி தெரிவிக்க யார் வேண்டுமானாலும் வரலாம். கூட்டத்திலும், மேடைகளிலும் யார் வேண்டுமென்றாலும் துண்டு போட்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இதை யாரும் தடுக்க முடியாது. மேடையில் ஏறி ஒருவர் சால்வை போடுகிறார் என்றால், அவரிடம் ஏன் சால்வை போடுகிறாய்? என கேட்டு தள்ளி விடமுடியாது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; கைதான நபரை போலீசில் காட்டிக் கொடுத்த உடன்பிறப்பு!
அப்படி செய்தால் தொண்டனை தள்ளிவிட்ட அமைச்சர் என்று செய்தியாக மாற்றுவீர்கள். இந்த வழக்கில் கைதான ஞானசேகரனுக்கும், எங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. எனவே, இந்த வழக்கை மூடி மறைக்க அவசியம் கிடையாது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு துரிதமாக விசாரணை நடைபெற்ற வருகிறது. அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.
— K.Annamalai (@annamalai_k) December 25, 2024
தமிழகம் முழுவதும், இதுபோன்ற… pic.twitter.com/K1ahEoIqE0
இந்த சம்பவம் பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவம் போன்று இல்லை. அச்சம்பவத்தில், அங்குள்ள முக்கிய நபர்கள் பின்புலத்தில் இருந்தனர். அந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்தார்கள். அதிமுக ஒன்றும் யோக்கியமான கட்சி இல்லை. எங்கள் கட்சியில் இதுபோன்று இருப்பவர்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இந்த சம்பவம் குறித்து அரசு தரப்பில் எந்த விதமான விவரங்களும் இன்னும் வெளியிடவில்லை.
பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு: பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் இந்தியாவில் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடு தான். எங்கள் ஆட்சியில் இந்தியாவிலேயே அதிக அளவு பெண்கள் உயர்கல்வி என்று பயின்று வருகின்றனர். இவற்றை எதிர்க்கட்சியினர் தடுப்பதற்கு முயற்சி செய்கின்றனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்களை FIR மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “அரசு தரப்பில் எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை” என்றார்.