கரூர்: கரூரில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் ஆன்லைன் செயலி மூலம் பணம் செலுத்திய மதுப் பிரியருக்கு, ஊழியர் ரசீது தர மறுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க நவம்பர் 29ஆம் தேதி முதல் அரசு மதுபான கடைகளில், பீஓஎஸ் (point of sale) மெஷின் மூலம் கூகுள் பே (G-Pay), போன் பே (Phone Pay) உள்ளிட்ட செயலி மூலம் பணம் செலுத்தும் டிஜிட்டல் (Digital Payment Method) பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் இயங்கும் 87 அரசு மதுபான கடைகளிலும் பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணம் செலுத்தினால், உடனடியாக ரசீதும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் வாங்கல் சாலையில் உள்ள பாலாம்மாள்புரம் கடை எண் - 5060-ல் மது வாங்கும் வாடிக்கையாளர்களைப் பணம் செலுத்தியதைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக, கடந்த டிச.16ஆம் தேதி மதுபான கடை ஊழியர்கள் அனைவரும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த புகார் தொடர்பாக, நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அதே கடையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விற்பனை மேற்பார்வையாளர் ராஜ்கண்ணா என்ற மதுபான கடை ஊழியர், பணிக்கு வந்த நிலையில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திய மதுப்பியருக்கு ரசீது தர மறுத்தாகக் கூறப்படுகிறது.
தற்போது, அது தொடர்பான வீடியோவில், ஒரு குவாட்டர் ரூ.145க்கு பதிலாக ரூ.150 செலுத்திட வேண்டுமென மதுப்பிரியரை கட்டாயப்படுத்தியதாகவும், ஊழியர் பணத்தை செலுத்திய பிறகு அதற்கு ரசீத தர மறுத்ததும், அதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர் கட்டாயம் தனக்கு ரசீது கொடுத்தால் தான் அந்த இடத்தில் இருந்து செல்வேன் என்று வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, அவர் வாங்கிய மது ரசீதுக்குப் பதிலாக வேறொரு ரசீதை ஊழியர் தருவதும், அந்த ரசீதை ஏற்க மறுத்து தான் செலுத்திய தொகைக்கு மட்டும் ரசீது தர வேண்டும் என பலமுறை கேட்டும் ஊழியர் ரசீதை தர மறுப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: கைதான நபருக்கு மாவு கட்டு - நடந்தது என்ன?
அரசு மதுபான கடைகளில் மது பாட்டில் ஒன்றுக்கு கூடுதல் விலை கொடுத்து மது பிரியர்கள் மது வாங்குவது தொடர்பாக எழுந்த புகாரில், சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி ரசீதுடன் மது பாட்டில்கள் பெற்றுக் கொள்ளும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்பொழுது டிஜிட்டல் முறையிலும் ஊழியர்கள் முறைகேடில் ஈடுபடுவதும், ரசீது கேட்கும் மது பிரியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள உள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் முறைகளில் ஈடுபட்டதும், அதனைத் தொடர்ந்து, அதே கடையில் பணம் செலுத்திய மது பிரியருக்கு ரசீது தர மறுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.