சென்னை: சென்னையில் உள்ள பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் அஸ்வின் வர்மா. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "பெசன்ட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பான 'ரமணியம் ஸ்வர்ணமுகி' என்ற குடியிருப்பில், விதிகளை மீறி போதுமான தரைதள வசதி இல்லாமல், கட்டுமான நிறுவனம் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்துக்கு ஆதாரவாக செயல்பட்டு உளனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, மாலா அமர்வில் இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டுமான நிறுவனம் சார்பில் எந்த விதி மீறல்களும் நடைபெறவில்லை எனவும், பெருநகர வளர்ச்சிக் குழும விதிகளின் படி கட்டுமானங்கள் முடிந்து, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முரளி குமரன், (Non FSI) தரைதள கட்டுமான விதிப்படி, கட்டிட உரிமையாளர்களுக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “விதிகளின்படி தரைதள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
சட்டவிரோத கட்டுமானங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி, அனைத்து கட்டிட உரிமையாளர்களின் பொது பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 2024 மக்களவை தேர்தல் தேதி: இந்திய தேர்தல் ஆணையம் நாளை அறிவிப்பு!