சென்னை: காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வந்ததால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள பாறையில் சில நாய்கள் சிக்கியுள்ளதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கும், தேசிய பேரிடர் மீட்புப் படைக்கும் உத்தரவிடக் கோரி 'விலங்குகளின் சொர்க்கம்' என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரகாஷ் காந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு அவசர வழக்காக விசாரித்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும், வருவாய்த் துறையினர் டிரோன் மூலம் நாய்களுக்கு உணவளித்து, அவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
தமிழக அரசின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நாய்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: “அது திரிக்கப்பட்ட தரவு தான்”.. 10.5% இடஒதுக்கீடு RTI விவரத்திற்கு ராமதாஸ் கண்டனம்!