சென்னை: தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் (டி.வி.ஏ.சி) அலுவலகத்தின் ரகசியப் பிரிவில், சிறப்பு உதவியாளராக கடந்த 2008ஆம் ஆண்டு பணியாற்றிய சவுக்கு சங்கர், அங்கு இருந்த சில உரையாடல்களைத் திருடி வெளியிட்டதாக சென்னை சிபிசிஐடி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல்துறை தரப்பில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதால் சங்கரை விடுதலை செய்து கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், சென்னை அமர்வு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சிபிசிஐடி காவல்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், விசாரணை நீதிமன்றம் அரசுத் தரப்பு சாட்சிகளை முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், உரையாடல்களைப் பதிவு செய்த பென்டிரைவ் சவுக்கு சங்கர் உடையது. அதில் சில ரகசியங்களைத் திருடி வெளியிட்டது அவர்தான். விசாரணை நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளாமல் விடுதலை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விடுதலை ரத்து செய்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரியுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நான்கு வாரங்களில் பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கருக்குத் தற்காலிக விடுதலை? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!