சென்னை: ஷாலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில், நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கியுள்ள கா – தி ஃபாரஸ்ட் படம் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என எய்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கா – தி ஃபாரஸ்ட் படத் தயாரிப்புக்காக, ஷாலோம் ஸ்டூடியோ உரிமையாளர் ஜான்மேக்ஸ் தன்னை அணுகி 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும், இந்த கடனை இழப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து 90 நாட்களில் திருப்பித் தந்து விடுவதாகவும், படத்தின் சாட்டிலைட் உரிமையை வழங்கவும் ஒப்புக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, கடன் தொகையையும், இழப்பீட்டுத் தொகையையும் திருப்பித் தராமல், படத்தின் வெளியீடு குறித்து தகவல் தெரிவிக்காமலும், நாளை படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், படத்தை வெளியிட அனுமதித்தால் அது தனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் மொத்த காப்புரிமையும் தனக்குச் சொந்தமானது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், படத்தை நாளை (மார்ச் 29) வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி தயாரிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: 'தலைவர் 171’ டைட்டில் டீசர் எப்போது? - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்! - Thalaivar 171 Title Teaser